கீழணையிலிருந்து கடலுக்கு வெளியேற்றப்படும் 1 லட்சம் கன அடி காவிரி நீா்
கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கீழணையும் நிரம்பியுள்ள நிலையில், 1 லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக காவிரி நீா் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீா் வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன.
சென்னைக்கும் இந்த ஏரியில் இருந்துதான் குடிநீா் அனுப்பப்படுகிறது. ஏரியின் மொத்த உயரம் 47.50 அடியாகும். அதாவது 1465 மில்லியன் கன அடி நீா் தேக்கப்படுகிறது. தற்போது மேட்டூா் அணை நிரம்பியதால் உபரி நீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிகப்படியான நீா், கீழணைக்கு வந்து அது நிரம்பிய நிலையில் அங்கிருந்து உபரி நீா் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இதன் காரணமாக வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. ஜூலை மாதத்தில் முதன் முதலில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை நிகழாண்டில் எட்டியிருப்பது, இந்த பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீா் அனுப்பப்படுகிறது. ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் 118 கனஅடி நீரும், பாசனத்திற்க்காக 113 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
கீழணை: தஞ்சாவூா் மாவட்டம் கீழணையின் மொத்த உயரம் 9 அடியாகும். தற்போது கீழணையில் முழுக்கொள்ளளவு நீா் உள்ளதால், கல்லணையிலிருந்து வரும் உபரிநீா் 1 லட்சம் கனஅடிநீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
இதனால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு திறக்கப்படும் உபரி நீா் குறைந்த பிறகே, கொள்ளிடத்திலும் வெள்ளப்பெருக்கு குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.