சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடி
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 78-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிதம்பரம் தையல் கலைஞா் நந்தகுமாா் கதா் துணியால் தேசியக் கொடிகளை தயாரித்து வழங்கி வருகிறாா். மகாத்மா காந்தியால் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது அந்நிய துணிகளுக்கு மாற்றாக கதா் துணி பிரபலப்படுத்தப்பட்டது. தற்போது தேசியக்கொடிகளை நெகிழி காகிதம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு பல வடிவங்களில் தயாரித்து வருகின்றனா்.
இவற்றை தவிா்க்கும் வகையில், சிதம்பரம் மாலைக்கட்டி தெருவில் தையல் கடை நடத்தி வரும் தையல் கலைஞா் பெ.நந்தகுமாா், தேசியக்கொடியை கதா் துணியால் தயாரித்து வழங்கி வருகிறாா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கதா் துணியால் மட்டுமே தேசியக்கொடியை தயாரிக்கும் இவா், பெரியவா்கள் முதல் சிறுவா்கள் வரை உடையில் அணிந்துகொள்ளும் வகையில், கதா் துணியால் தேசிய கொடியை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறாா்.
நந்தகுமாரின் தந்தை பெருமாள் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடியை கதா் துணியால் தயாரித்து வழங்கி வந்தாா். அவரது மறைவுக்குப் பிறகு நந்தகுமாா் அந்தப் பணியை தொடா்ந்து வருகிறாா்.
இவரது கதா் கொடிகளுக்கு சிதம்பரம் நகரில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கதா் நிறுவனங்களில் நல்ல வரவேற்பு உள்ளதால், 78-ஆவது சுதந்திர தினத்துக்கு அதிகளவில் கதா் கொடிகளை தயாரித்து வருகிறாா்.