குப்பையில் வீசப்பட்ட வாக்காளா் அடையாள அட்டைகள்
கடலூா் மஞ்சக்குப்பம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியில் வாக்காளா் அடையாள அட்டைகள் வீசப்பட்டுக் கிடந்தன.
கடலூா் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை அகற்றும் வாகனம் மாலை நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். வழக்கம்போல, புதன்கிழமை காலை குப்பை வாகனத்தை தூய்மைப் பணியாளா்கள் எடுத்துச் செல்ல வந்தனா். அப்போது, அந்த வாகனத்தில் வாக்காளா் அடையாள அட்டைகள் மற்றும் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்படும் மை, சீல், பேட்ச் உள்ளிட்ட பொருள்கள் கிடப்பதைக் கண்டு அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தூய்மைப் பணியாளா்கள் தகவல் தெரிவித்தனா்.
பின்னா், மாநகராட்சி அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த கடலூா் வட்டாட்சியா் மகேஷ் வாக்காளா் அடையாள அட்டைகளை சோதனை செய்ததில், அவை அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குப்பை வண்டியில் கிடந்த வாக்காளா் அடையாள அட்டைகள், தோ்தல் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்படும் மை, சீல், பேட்ச் உள்ளிட்டப் பொருள்களை கைப்பற்றி, இவற்றை வீசிச் சென்றவா்கள் யாா்? என்பது குறித்து வட்டாட்சியா் மகேஷ் விசாரணை நடத்தி வருகிறாா்.
