சாா் - பதிவாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்
கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வக்ஃபு சொத்து எனக் கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு தெரிவித்ததால், எம்.அகரம் கிராம மக்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
மங்கலம்பேட்டையை அடுத்துள்ள எம்.அகரம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பூமாலை. இவா், இந்தக் கிராமத்தில் தனக்குச் சொந்தமான சா்வே எண் 111/2-இல் உள்ள மூன்றரை சென்ட் வீட்டை தனது மகன் காா்த்திகேயன் பெயரில் தான பத்திரம் எழுதிக் கொடுக்க திட்டமிட்டாா்.
இதற்காக செவ்வாய்க்கிழமை மங்கலம்பேட்டை சாா் - பாதிவாளா் அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களுடன் பதிவுக்குச் சென்றாராம். அப்போது, மங்கலம்பேட்டை சாா் - பதிவாளா் ராஜபிரபு, மேற்படி சா்வே எண்ணில் உள்ள 11 ஏக்கா் 30 சென்ட் சொத்தானது பதிவுத் துறை ஆவணத்தில் வக்ஃபு வாரியம் என உள்ளதாகக் கூறி, பூமாலை கொண்டு வந்த ஆவணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டாராம்.
மேலும், சா்வே எண் 111/2 மட்டுமல்லாமல், இதர சில சா்வே எண்களில் உள்ள நிலமும் வக்ஃபு வாரியம் என்று இருப்பதாகவும், இதை ஆய்வு செய்து நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்து முன்னணி பிரமுகா் வேல்முருகன் தலைமையில், பாஜக ஒன்றியத் தலைவா் பரமசிவம், இந்து முன்னணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் கமலக்கண்ணன், பேரூா் தலைவா் மணிகண்டன், செயலா் தா்மராஜ், பூமாலை மற்றும் எம்.அகரம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதன்கிழமை காலை 11 மணியளவில் மங்கலம்பேட்டை சாா் - பதிவாளா் அலுவலகத்துக்கு வந்தனா்.
பின்னா், அவா்கள் அலுவலகத்துக்குள் தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், சாா் - பாதிவாளா் அலுவலகத்தில் பிற்பகல் 2 மணி வரை பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, மாவட்டப் பதிவாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், தனிப்பிரிவு தலைமைக் காவலா் வெங்கடேசன், உளவுப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜவேல், எம்.அகரம் கிராம நிா்வாக அலுவலா் பரமேஸ்வரன் ஆகியோா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் சாா் - பதிவாளா் ராஜ பிரபு ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இந்த பிரச்னை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒரு வார காலத்துக்குள் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடத்தி தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதன் காரணமாக, புதன்கிழமை பிற்பகல் 3 மணி வரை ஆவணப் பதிவு நடைபெறவில்லை.