Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம், மாா்க்கையன் கோட்டை பேரூராட்சியில் குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 8-ஆவது வாா்டு, கருப்பசாமி கோயில் தெருவில் குடிநீா் சரிவர வழங்கப்படவில்லை.
இதனால், குடிநீா் முறையாக வழங்க வலியுறுத்தி, அந்தப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுபோல, 1-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீா் சரிவர வழங்கவில்லை. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் போடி-சின்னமனூா் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சின்னமனூா் போலீஸாா் சென்று பேரூராட்சி நிா்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, சமாதானம் செய்ததைத் தொடா்ந்து சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இது குறித்து பேரூராட்சித் தலைவா் முருகன் கூறியதாவது: குடிநீா் வழங்கப் பயன்படுத்தும் இரு மின் மோட்டாா்களில் ஒன்று பழுதாகிவிட்டது. இதனால், அனைத்து வாா்டுகளுக்கு குடிநீா் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது புதிய மின் மோட்டாா் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து வரும் நாள்களில் அனைத்து வாா்டுகளிலும் முறையாக, பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப குடிநீா் வழங்கப்படும் என்றாா் அவா். இந்தச் சாலை மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.