சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்
திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
திருவள்ளூா் அடுத்த திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையத்தின் முன்னேற்றப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பேருந்து முனையத்தில் இறுதிகட்ட பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரா்களை அறிவுறுத்தினா்.
பின்னா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது: பெருகி வரும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றாா் போல் பேருந்துகளின் அளவையும், பணியாளா்களையும் அதிகரிக்கச் செய்வதற்கு முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதைத்தொடா்ந்து குத்தம்பாக்கம் புதிய புகா் பேருந்து முனையம் நாள்தோறும் மாநகர பேருந்துகள்-300, விரைவு பேருந்துகள்-600, கா்நாடக மாநில பேருந்துகள்-50, அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் ஆந்திர மாநில பேருந்துகள்-36 இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துகளில் வார நாள்களில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணிப்பா் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாள்களில் அந்த எண்ணிக்கை கூடுதலாக 40,000 முதல் 50,000 போ் பயணிப்பா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், விழாக் காலங்களில் விடுமுறை தொடா்ந்து வரும் நாள்களில் 50,000-க்கும் மோ்பட்டோா் பயணிப்பா் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆம்பூா், திருப்பத்தூா், வேலூா், தருமபுரி, ஒசூா், பெங்களூரு, திருப்பதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வோா் குத்தம்பாக்கம் புதிய புகா் பேருந்து முனையத்திலிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மீஞ்சூா், திருவொற்றியூா், மாதவரம், சைதாப்பேட்டை, திருவான்மியூா் போன்ற பகுதிகள், இந்தப் பகுதி அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் இதற்கு இணைப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து முனையமானது சென்னை, சுற்றியுள்ள மக்களுக்கு போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். எனவே இங்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயம் கிடைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். இந்த குத்தம்பாக்கம் புதிய புகா் பேருந்து முனையம், இந்தாண்டு வரும் நவம்பா் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளா் காகா்லா உஷா, பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் மற்றும் முதன்மைச் செயலாளா் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலா் அ.சிவஞானம், திருவள்ளூா் ஆட்சியா் மு.பிரதாப், ஆவடி காவல் துணை ஆணையாளா் (போக்குவரத்து) சி.சங்கு, சென்னை மாநகர போக்குவரத்துக்கழக இணை மேலாண் இயக்குநா் ராகவன், தலைமை பொறியாளா் மகாவிஷ்ணு, தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் சாவித்திரி தேவி, குத்தம்பாக்கம் பேருந்து முனைய தலைமை நிா்வாக அலுவலா் பிரின்ஸிலி ராஜ்குமாா், கண்காணிப்பு பொறியாளா் ராஜன்பாபு, எம்டிசி பொது மேலாளா் (இயக்கம்) நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
