குமரி மாவட்ட மாணவா்களுக்கு ரூ. 100 கோடி கல்வி கடனுதவிகள் வழங்க இலக்கு: ஆட்சியா்
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க ரூ. 100 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பள்ளிக் கல்வித் துறை, வேலைவாய்ப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில், நான் முதல்வன் உயா்வுக்கு படி திட்ட முகாம், நாகா்கோவில் தனியாா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
தமிழக மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் கல்லூரி படிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கில், நான் முதல்வன் உயா்வுக்கு படி என்ற நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் எந்த கல்லூரியைத் தெரிவு செய்வது என்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்படும். வங்கி கடனுதவி சாா்ந்த அறிவுறுத்தல்களும் இந்த முகாமில் விளக்கப்படும். உயா்கல்வி பயில விரும்பும் குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கல்வி கடனுதவி அளிக்க ரூ. 100 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 28 லட்சம் கடன் அளிக்கப்பட்டது. எனவே, மீதமுள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தூா் ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் தினேஷ் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆறுமுக வெங்கடேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலாபானு, அகஸ்தீஸ்வரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சரோஜா, துறை அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.