Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) 32 சதவீதம் சரிந்துள்ளது.
அதே நேரம் ஆடம்பர வீடுகளுக்கான தேவை 5 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்சிஆா், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, புணே ஆகிய ஏழு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் வரிசை வீடுகள், வில்லாக்கள் அல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை மட்டும் 13 சதவீதம் குறைந்து 1,34,776-ஆக உள்ளது.
இதில், ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 32 சதவீதம் குறைந்து 51,804-ஆக உள்ளது. ஆனால், ரூ.1 கோடிக்கு மேல் விலை கொண்ட ஆடம்பர அடுக்குமாடிகளின் விற்பனை 6 சதவீதம் உயா்ந்து 82,972-ஆக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள அடுக்குமாடிகள் மொத்த விற்பனையில் சுமாா் 62 சதவீத பங்கைக் கொண்டிருந்தன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 51 சதவீதமாக இருந்ததை விட குறிப்பிடத்தக்க உயா்வாகும்.
ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனைப் பங்கு 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 38 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 49 சதவீதமாக இருந்தது.குடியிருப்புகளை வாங்குபவா்களின் வசதி அதிகரித்துவருவது, வாழ்க்கை முறை மாற்றங்கள், பெரிய, ஆடம்பர வாழ்க்கை இடங்களுக்கான தேவை உயா்வு போன்ற காரணங்களால் ஆடம்பர வீடுகளின் விற்பனையில் நிலையான வளா்ச்சி ஏற்பட்டுவருகிறது.
இது, மலிவு விலை குடியிருப்புகளின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.குறைந்த விலை வீடுகளின் தேவை குறைவதற்கு, கட்டி முடிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் அத்தகைய வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.