அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த காரணம் என்ன?
புது தில்லி: தொழில்களில் நஷ்டம், கடன் என பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான 110 இடங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.
யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், பண மோசடி வழக்கில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய 35 வளாகங்கள், 50 நிறுவனங்கள், 25 தனிநபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை காலை சோதனை நடத்தியிருக்கிறது.
கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என அனில் அம்பானியையும், மோசடி கடன் என ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்த கடனையும் அடையாளப்படுத்தி, பாரத ஸ்டேட் வங்கி நேற்று அறிவித்திருந்த நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை இன்று இந்த சோதனையை நடத்தியிருக்கிறது.
அமலாக்கத் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், 2017 - 2019ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ரூ.3000 கோடியை திருப்பிவிடப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மோசடியை கண்டுபிடித்துள்ளது. யெஸ் வங்கியிடமிருந்து, ரிலையன்ஸ் குழுமத்துக்கு கடன் தொகை வழங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான், அந்த வங்கியின் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு லஞ்சத் தொகையானது அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் சந்தேகிக்கிறது.
யெஸ் வங்கியும் ராணா கபூர் விசாரணையும்
இந்த வழக்கானது இன்று நேற்றல்ல, கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, ஒரு மிகப்பெரிய விசாரணையின் அடிப்படையில் தொடுக்கப்பட்டது. அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் - 9 நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.12,800 கோடி கடன் வாங்கியது உள்பட - யெஸ் வங்கியின் அப்போதைய பிரமோட்டர் ராணா கபூருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தது. அப்போது பண மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின்போது, இதேப்போன்று எஸ்ஸெல், டிஎச்எஃப்எல், ஜெட் ஏர்வேஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனங்களும், வங்கி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதர வங்கிகளுடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மோசடி
கடந்த ஜூன் மாதம், பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் பிரமோட்டர்களின் கடன்களை "மோசடி" என்று வகைப்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு அறிவித்தது. இந்த அறிவிப்பில், ரூ.2,227 கோடி நிதி அடிப்படையிலான கடன்களும், ரூ.786 கோடி நிதி அல்லாத கடன்களும் அடங்கும்.
இந்தக் குற்றச்சாட்டில், கடன் தொகையை வேறு அமைப்புகளுக்கு அனுப்புதல், தவறாகப் பயன்படுத்துதல், குழும நிறுவனங்களிடையே சுழற்சியான முறையில் பரிவர்த்தனையை மேற்கொள்ளுதல், மேலும் அறியப்படாத பல முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தரப்பில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கையில், ஆர்காம் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், எஸ்பிஐ மட்டுமல்லாமல் பல்வேறு வங்கிகளிடமிருந்து ரு.31,500 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதில், ரூ.13,667 கோடியை, ஏற்கனவே நிறுவனம் வாங்கியிருந்த கடன்களைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தியிருக்கிறது. மேலும் ரூ.12,692 கோடியை, குழுமத்துடன் தொடர்புடைய பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறது. தொடர்ந்து ரூ.6,265 கோடி, எந்த தொடர்பும் இல்லாத காரணங்களுக்காக செலவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.