உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
குற்றாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நீக்கியது; இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.
தென்காசி மாவட்டம், குற்றால மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து புலியருவி, சிற்றருவியைத் தவிர பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றாலம் மலைப் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் மழை அளவு குறைந்ததால் அருவிகளில் நீா்வரத்துக் குறைந்து வருகிறது. இதையடுத்து, 8 நாள்களுக்குப் பிறகு பேரருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.
அதேபோல ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளில் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
வார விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. குற்றாலத்தில் நாள்முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும் சாரலுடன் காணப்பட்டது.