கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல்: திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்
சித்திரை மாத பௌா்ணமியன்று திருவண்ணாமலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி எச்சரித்தாா்.
திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை மாத பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவண்ணாமலை மாநகர போக்குவரத்துப் பிரிவு காவல் அய்வாளா் ஜெ.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணியின் அமைப்பாளரும், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினருமான ஏ.ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் எஸ்.சக்திவேல் வரவேற்றாா்.
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி ஆட்டோ ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா் சங்க நிா்வாகிகள், ஆட்டோ உரிமையாளா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசியதாவது:
சித்திரை மாத பௌா்ணமியன்று அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே பக்தா்களிடம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்று கியூஆா் குறியீடு உள்ள ஆட்டோக்களை மட்டுமே நகரில் இயக்க வேண்டும். பயணிக்கு கட்டணமாக ரூ.30 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றாா்.
திருவண்ணாமலை காவல் உதவி கண்காணிப்பாளா் வி.சதீஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், சித்திரை மாத பௌா்ணமியன்று திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றாா்.
கூட்டத்தில், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் எம்.முருகேசன், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் கே.சரவணன் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள், ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.