எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி குறைவு: அமைச்சா் கே.என். நேரு
கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி மிகக்குறைவு என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 72-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆா்.எஸ்.புரம் சுப்பிரமணியம் சாலை மாதிரிப் பள்ளியில் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவா்கள் தங்கும் விடுதி மற்றும் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் கே.என்.நேரு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
இதையடுத்து, உக்கடம் பேருந்து நிலைய வளாகத்தை ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பிக்கும் பணி, தெற்கு மண்டலம், 99-ஆவது வாா்டுக்குள்பட்ட வெள்ளலூா் உரக்கிடங்கு வளாகத்தில் சுமாா் 250 மெட்ரிக் டன் மக்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
மேலும், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.90.75 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.95.63 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் 45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஹாக்கி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வரிகள் யாருக்கு உயா்த்தப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளோம். கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி மிகவும் குறைவு. ஒருமுறை வரியை உயா்த்திவிட்ட பிறகு மீண்டும் உயா்த்தக் கூடாது என்று முதல்வா் கூறியுள்ளாா் என்றாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, நகராட்சி நிா்வாக இயக்குநா் ப.மதுசூதன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.