கொங்கு நாட்டு குல தெய்வம்...
கொங்கு நாட்டு குல அம்மனாக, குல தெய்வமாகத் திகழும் "கொங்கு குல அம்மன்' என்ற பெயரே மருவி "கொங்கலம்மன்' ஆயிற்று என்பர்.
ஈரோடு மாநகரில் மணிக்கூண்டுக்கு அருகில், கொங்கலம்மன் கோயில் வீதியில் "கொங்கலாயி' என்று அழைக்கப்
படும் இந்த அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்
கிறார். ஒரே கல்லால் ஆன தீபஸ்தம்பம் நான்கு கால் மண்டபத்தில் அமைந்துள்ளது. அடிப்புறம் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
அழகிய வேலைப்பாடுடன் கூடிய அலங்கார வாயிலும், மூன்று நிலை ராஜ கோபுரமும் உயர்ந்து நிற்கின்றன. உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், சிம்மம் ஆகியவற்றைக் கடந்து செல்கையில் கல்தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தீர்த்தக் கிணறு உள்ளது.
அரச மரத்தின் கீழ் கற்பக விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஈசான்ய மூலையில் நாதர்களுக்குத் தனி மண்டபம், பிரத்யங்கராதேவி சந்நிதியும், மேற்கு நோக்கியபடி இரண்டு குதிரைகளும், அருகில் மதுரை வீரன் சந்நிதியும் அமைந்துள்ளது. கருப்பராயர் சந்நிதி, சப்த கன்னிமார், பேச்சியம்மன், அகோர வீரபத்திரர், முனியப்பன் சந்நிதிகளும் உள்ளன.
மகா மண்டபத்தில் கொங்கலம்மன் உலாத்திருமேனி எட்டுக் கரங்களோடு உள்ளது. அதன் அருகிலேயே நான்கு கரங்களுடன் மாரியம்மன் செப்புத் திருமேனி ஒன்றும் உள்ளது.
கருவறையில் கொடிய அரக்கனை அழித்து, கம்பீரமாக மலர்ந்த முகத்துடன் காட்சித் தருகிறாள் கொங்கலாயி. சூலம், உடுக்கை, கத்தி, வாள் ஆகியவை வலது கரங்களிலும், பாம்பு, வேதம், மணி, கபாலம் ஆகியவை இடது கரங்களிலும் ஏந்தியபடி அற்புதக் காட்சி அது.
கொங்கலம்மனை தரிசித்துவிட்டு, வெளியே வருகையில் நுழைவுவாயில் மேலே சுதை வடிவிலான தவசியம்மன் சிலையைக் காணலாம். உலக நன்மைக்காக அன்னை தவமிருக்கும் அற்புதக் காட்சி அது. கோயிலில் தைப் பூசத் திருவிழா சிறப்புற நடைபெறும். ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.