கோ-கோ விளையாட்டு பயிற்சியாளா் பணிக்கு ஏப்.3 -இல் நோ்முகத் தோ்வு
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மையத்தில் கோ-கோ பயிற்சி அளிக்க தகுதியுடைய கோ-கோ வீரா், வீராங்கனைகள் வருகிற 3.4.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கேலோ இந்தியா திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கோ-கோ பயிற்சிக்கான மாவட்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி அளித்திட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குள்பட்ட கோ-கோ வீரா், வீராங்கனை ஒருவா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.
விண்ணப்பதாரா் குறைந்தது 5 ஆண்டுகள் சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். சா்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது சீனியா் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.
மேலும், தோ்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இந்தப் பணியானது முற்றிலும் தற்காலிகமானதாகும். இதனடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகையோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. உடல் தகுதி, விளையாட்டுத் திறன், வென்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு நடைபெறும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்கள் வருகிற 3.4.2025 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.