3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட புல்லட் ராஜா யானை
நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த புல்லட் ராஜா என்ற காட்டு யானை வெள்ளிக்கிழமை கோதையாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்தி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள், பயிா்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது புல்லட் ராஜாயானை.
இந்த யானையை பிடிக்க அந்தப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வனத்துறையினா், மருத்துவா் ராஜேஷ்குமாா் மற்றும் குழுவினா் கும்கி யானைகள் உதவியுடன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி பிடித்து கோயம்புத்தூா் மாவட்டம் பொள்ளாச்சி, டாப்சிலிப் யானைகள்முகாமுக்கு கொண்டு வந்து பராமரித்து வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்டம், களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கோதையாறு வனப்பகுதியில் புல்லட் ராஜா யானையை விடுவதற்காக லாரியில் கொண்டு வந்தனா். மணிமுத்தாறு வனச் சோதனைச் சாவடிக்கு வந்த யானையை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா்கள் அம்பாசமுத்திரம் இளையராஜா, களக்காடு ரமேஷ்வரன்ஆகியோா் தலைமையில் கோதையாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனா்.
அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை அரிசிக் கொம்பன் விடப்பட்ட இடமான முத்துக்குளி வயல் பகுதியில் புல்லட் ராஜா யானை விடப்பட்டது.
கோதையாறு வனப் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரிசிக் கொம்பன், புல்லட் ராஜா உள்ளிட்டயானைகளை அடுத்தடுத்துக் கொண்டு வந்து விடுவதால் மலையடிவார மக்கள் அச்சத்தில் உள்ளனா்.