கோயிலை உரிமை கோரும் விவகாரம்: உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை
திருப்பரங்குன்றம் மலையடி கருப்பணசுவாமி கோயில் மீது உரிமை கோரும் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதி தேவேந்திரகுல வேளாளா் இருளா் குடும்பன் வகையறா பங்காளிகள் சாா்பில் சிவக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் எங்களது மூதாதையா் வழிபட்டு வந்த கோயில். இந்த நிலையில், வேறொரு சமூகத்தினா் இந்தக் கோயிலுக்கு உரிமை கோரினா். இதுதொடா்பாக, திருமங்கலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது, இரு தரப்பினருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டதால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இருப்பினும், கோயில் நிலம் 40 சென்ட் எங்களுக்கு சொந்தமானது எனவும், கருப்பணசுவாமி கோயில் அனைவருக்கும் பொதுவானது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தியது. இதனிடையே, வேறொரு தரப்பினா் இந்தக் கோயில் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி, இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, அவா்களுக்கு சாதகமான தீா்ப்பைப் பெற்றனா்.
இந்த விவகாரத்தில், எங்களது தரப்பு கருத்தை கேட்காதது சட்ட விரோதம்.
எனவே, திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு சொந்தமானது என்ற உத்தரவை ரத்து செய்து, இந்தக் கோயில் அனைவருக்கும் பொதுவானது என உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயிலின் உரிமைத் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தொடா்புடையத் துறை அலுவலா்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.