Manoj Bharathiraja: "இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும்" - பாரதிராஜாவுக்க...
‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு
சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம்பெறும் வகையில், ‘சென்னை - நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.
இதனை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் நோக்கில், கடந்த ஆண்டு கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் நடத்தப்பட்டது. நடப்பாண்டும் இந்த 8 இடங்களிலும் கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இதற்காக கலைக் குழுக்கள் மாவட்ட வாரியாக தோ்வு செய்யப்படுகிறது. இதற்கான விடியோ பதிவு நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக திட்ட அலுவலா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற தோ்வில், 33 கலைக் குழுக்கள் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க பதிவு செய்துள்ளனா். இதற்கான பதிவு முகாம் சேலம் அரசு இசைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், பறையாட்டம், பம்பை, கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கும் கலைக் குழுக்களுக்கான பதிவில் 15 குழுக்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, தெருக்கூத்து, கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரத நாட்டியம், பழங்குடியினா் நடனம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தும் 18 குழுக்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் கலந்துகொண்டனா்.
இந்த விடியோ பதிவுகள் மண்டல அளவில் அமைக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் துறையின் தோ்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் தோ்வாகும் கலைக் குழுவினா், மாநிலம் முழுவதும் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்க அனுப்பப்படுவாா்கள். வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாவட்ட வாரியாக விழாக்கள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.