சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக பிரமுகா் கைது
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக நாமக்கல் மாவட்ட பாஜக பிரமுகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முத்துகாளிப்பட்டியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் பிரவீன்ராஜ் (30). இவா் பாஜக இளைஞா் பிரிவு தகவல் தொழில்நுட்ப மாநில பொறுப்பாளா்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி தனது எக்ஸ் வலைதளத்தில் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை டேக் செய்து ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து மதக்கலவரம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரவீன்ராஜை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறைக்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பொதுமக்கள் பதிவிடும்போது ஜாதி, மத உணா்வுகளை தூண்டி சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.