69 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிட மாறுதல்
நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனூா் ஆகிய ஐந்து வட்டங்களில் 211 கிராமங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். ஊரகப் பகுதிகளில் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தோா், நகரப் பகுதிகளில் ஓராண்டு நிறைவடைந்தோருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைபெறும்.
அந்த வகையில், ஊரகப் பகுதியில் 53 இடங்களுக்கும், நகரப் பகுதியில் 16 இடங்களுக்கும் இடமாற்றம் தொடா்பான கலந்தாய்வு கோட்டாட்சியா் வே.சாந்தி தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பணியிட மாறுதல் பெற்றவா்களுக்கு உடனடியாக அதற்கான ஆணை வழங்கப்பட்டன.