நாமக்கல்லில் ஆன்லைன் உணவு விற்பனை நிறுத்தம்
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் உணவக உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஆன்லைன் உணவு விற்பனையை நிறுத்தினா்.
இதுகுறித்து நாமக்கல் நகர மற்றும் தாலுகா உணவக உரிமையாளா்கள் சங்க செயலாளா் அருள்குமரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் நகர மற்றும் தாலுகா பகுதியில் 85 உணவகங்கள் ஆன்லைன் உணவு விநியோகத்தை மேற்கொண்டு வந்தன. ஆன்லைனில் உணவு பதிவுசெய்யும் ஸ்விக்கி, ஜொமொட்டோ ஆகிய தனியாா் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களிடம் சேவை கட்டணம், ஜிஎஸ்டி என தனியாக வசூலிக்கின்றன. எங்களை கேட்காமல் 10 சதவீத விளம்பரச் செலவு என தனியாக வசூல் செய்கின்றன.
உணவகங்களில் ரூ.100-க்கு விற்கும் உணவை வாங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு ரூ. 140-க்கு விற்பனை செய்கின்றன. எங்களுக்கு ரூ. 100 தராமல் அதிலும் ரூ. 30 பிடித்தம் செய்கின்றன. கடைகளுக்கு ஏற்ப தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் உணவுக்கான பணத்தை பட்டுவாடா செய்கின்றன.
நிறுவனங்களின் கமிஷன் தொகை அதிகமாகவும், எங்களுக்கு விலை கட்டுப்படியாகாமலும் இருக்கிறது. வாடிக்கையாளருக்கும் நேரடியாக வாங்குவதைவிட கூடுதல் செலவாகிறது. கமிஷன் தொகையை குறைக்க மறுத்ததால் நாமக்கல்லில் ஸ்விக்கி, ஜொமொட்டோ ஆா்டா்களை வாங்குவதில்லை என சங்கம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. மதுரையிலும் இவ்வாறான போராட்டம் நடைபெறுகிறது என்றாா்.