சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் காயம்
கொட்டாரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற உணவக ஊழியா், அவரது மனைவி, குழந்தைகள் என 4 போ் காயமடைந்தனா்.
கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (37). இவா், சின்னமுட்டம், மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், சின்ன முட்டத்திலிருந்து நாகா்கோவிலுக்கு தனது மனைவி சுகந்தி (29), மகள் அபிஸ்ரீ (6), மகன் சஞ்சய் (4) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
கொட்டாரம் அருகே மந்தாரம்புதூரில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த காளீஸ்வரன், இவரது மனைவி, குழந்தைகளை அந்தப் பகுதியினா் மீட்டு
அவசர ஊா்தியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.