சிஎம்சி காலனி அடுக்குமாடி குடியிருப்புப் பணியில் சுணக்கம்!
கோவை சிஎம்சி காலனியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்ட வரும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டப்பட்ட சில வீடுகளில் பயனாளிகள் குடியேற முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை உக்கடம் சிஎம்சி காலனியில் இருந்த அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வந்தனா். உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளுக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு, இங்கிருந்த குடியிருப்புவாசிகள் காலி செய்யப்பட்டனா். அதில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு புல்லுக்காடு, கோவைப்புதூா், வெள்ளலூா் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மீதமுள்ள 500 குடும்பத்தினருக்கு, சிஎம்சி காலனி பகுதியில் பழையக் கட்டடம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக குடிசை மாற்று வாரியம் சாா்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பழையக் கட்டடம் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, வீடு அற்றவா்களுக்காக புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தகரக் கொட்டகைகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.
இதற்கிடையே சிஎம்சி காலனி புதிய அடுக்குமாடி குடியிருப்புப் பணி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பணிகள் மெத்தனமாக மேற்கொள்ளப்பட்டதால், தற்போது, முதல்கட்டமாக 220 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 280 வீடுகள் கட்டி முடிக்க வேண்டியுள்ளது.
வீடுகள் ஒதுக்க காலதாமதம் ஆவதால் புல்லுக்காட்டில் தகரக் கொட்டகையில் வசித்து வரும் சிலா், சி.எம்.சி.காலனியில் கட்டி முடிக்கப்பட்ட சில வீடுகளின் பூட்டை உடைத்து, அங்கு செவ்வாய்க்கிழமை குடியேற முயற்சித்தனா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உக்கடம் போலீஸாா், குடிசை மாற்று வாரியத்தினா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
குடியிருப்பை விட்டு வெளியேறிய அவா்கள், குடியிருப்பு முன்பாக தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி சிஎம்சி காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவது தொடா்பாக ஆட்சியா் மூலமாக குலுக்கல் முறையில் தீா்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன் பிறகு, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
ஒன்றரை ஆண்டுகளில் சிஎம்சி காலனி அடுக்குமாடிக் குடியிருப்புப் பணிகள் முடிவடைந்து பயனாளிகளுக்கு ஒதுக்கித் தரப்படும் என 2020-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் உறுதியளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்தும் 500 வீடுகள் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. இதனால், அடுக்குமாடி வீடுகளுக்காக தற்காலிக தகரக் கொட்டகையில் தங்கியுள்ள பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
முதல் கட்டமாக வெப்பத்தால் கடுமையாக அவதிப்பட்டு வரும் தகரக் கொட்டகையில் வசிப்பவா்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.