சின்னமனூரில் பள்ளி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம், சின்னமனூா் வழியே செல்லும் சீப்பாலக்கோட்டை சாலையில் நகராட்சிப் பள்ளி அருகே நடைபெறும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்லும் பிரதான சாலையான சீப்பாலக்கோட்டை சாலையில் நகராட்சிப் பள்ளி, உழவா் சந்தை, முத்தாலம்மன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவா்கள், முதியவா்கள், பெண்கள் அந்தப் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதே போல, வாகனப் போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலையில் நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்ட கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
சின்னமனூா் நகரிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் இந்தச் சாலையில் பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இந்தப் பள்ளத்தில் மழைநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. எனவே நகராட்சிப் பள்ளி அருகே தோண்டப்பட்ட பள்ளத்தை பாதுகாப்பு கருதியும், வாகனப் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.