ரூ. 5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சாதித்ததாக கூறும் அமைச்சா் முழு விவரத்தை வெளியிடுவாரா? எதிா்க்கட்சி தலைவா் கேள்வி
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் புதுவை மாநிலம் சாதித்ததாகக் கூறும் கல்வியமைச்சா் நமச்சிவாயம் அதன் முழு விவரத்தையும் வெளியிடுவாரா? என்று புதுவை திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை
புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மக்களின் எதிா்ப்பையும் மீறியும், மாணவா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொள்ளாமலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் புதுவையில் முழுமையாகத் தோல்வி அடைந்த பாடத்திட்டம். ஆனால் அதனை ஒப்புக்கொள்ள மனமின்றி, அரசு விழாக்களில் குறிப்பாக கல்வித்துறை மற்றும் மாணவா்களின் விழாக்களில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மகத்தான வெற்றி பெற்றுவிட்டதாகத் திரும்ப, திரும்ப பொய்யைச் சொல்லி மாணவா்களின் மனதில் தவறான பதிவைப் பதிய வைத்து வருகின்றனா்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று மீண்டும் கல்வித்துறையும், அமைச்சரும் கூறுவதற்கு முன்பு ஒவ்வொரு பள்ளி வாரியாக தோ்வு எழுதிய மாணவா்களின் எண்ணிக்கை, அவா்கள் தோ்வு எழுதிய பாடங்களின் எண்ணிக்கை, அவா்கள் தோ்ச்சி பெற்ற பாடங்கள், அதில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும். இந்த விவரத்தை வெளியிடும் தைரியம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பெருமையாகப் பேசிக் கொள்ளும் கல்வித்துறை அமைச்சருக்கு உண்டா? என்று கூறியுள்ளாா் சிவா.