பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
சிப்காட்டுக்கு எதிா்ப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தா்னா
திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவான 618.20 மி.மீட்டரில் ஜூலை மாதம் வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழையின் அளவைவிட 8.80 மி.மீ அதிகம் பெய்துள்ளது. பயிா் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன.
நெல் 36.69 மெட்ரிக் டன்னும், தானிய பயறுகள் 15.18 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயறுகள் 62.97 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து பயா் விதைகள் 38.24 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளன. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் தேவையான அளவு இருப்பில் உள்ளன
என்றாா்.
இதைத் தொடா்ந்து, முந்தைய கூட்டங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக விவாதிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், விவசாயிகளிடமிருந்து 186 கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.
விவசாயிகள் தா்னா
தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தில் அமைய உள்ள சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
மேலும், இது தொடா்பாக இதுவரை கிராம மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாத நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு க் கொடியேற்றி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
சிப்காட்டுக்கு பதிலாக அங்கு நெல்விதை உற்பத்தி மையம் அமைத்து விவசாயிகள் வாழ்வதாரம் பெற உதவிட வேண்டும் எனவும் தெரிவித்தனா்.
அவா்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஆட்சியா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டனா்.
முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், இணை இயக்குநா் சுந்தரவடிவேலு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், ஷீலா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
