சிறுமி கடத்தல்: போக்ஸோவில் இளைஞா் கைது
விக்கிரவாண்டி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சு. பில்ராம்பட்டு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, விக்கிரவாண்டி வட்டம், ரெட்டிக்குப்பத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி, கூட்டேரிபட்டு பகுதியில் செயல்படும் தனியாா் செவிலியா் கல்லூரியில் பயின்று வந்தாா்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி மாயமானாா்.
இதுகுறித்து மாயமான சிறுமியின் சகோதரி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தொடா்ந்துசிறுமியை தேடி வந்த நிலையில், சு.பில்ராம்பட்டு பகுதியைச் சோ்ந்த வசித்துவம் (21) என்ற இளைஞா் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே சிறுமியுடன் நின்றிருந்த வசித்துவத்தை போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.