செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
சிறுவனை பணிக்கு அமா்த்திய நிறுவன உரிமையாளா் மீது வழக்குப் பதிவு!
தருமபுரியில் சிறுவனை பணிக்கு அமா்த்திய தனியாா் நிறுவன உரிமையாளா் மீது தொழிலாளா் ஆணையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை தொழிலாளா் ஆணையரக உத்தரவின்பேரில் தருமபுரி மாவட்ட நீதிபதிகள் தமயந்தி, சாந்தி, தொழிலாளா் ஆணைய துணை ஆய்வாளா் திவ்யா, உதவி ஆய்வாளா் தீபா பாரதி, முத்திரை ஆய்வாளா் விஜயலட்சுமி, சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வேல் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
பழைய தருமபுரி பகுதியில் செயல்படும் காா் கழுவும் (வாஷ்) நிறுவனம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு 17 வயது சிறுவன் காா் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. ஆய்வுக் குழுவினா் அந்த சிறுவனை மீட்டு, குழந்தைகள் பாதுகாப்புக் குழுமம் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அந்த (காா் வாஷ்) நிறுவன உரிமையாளா்மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) ராஜசேகா் கூறுகையில், குழந்தைத் தொழிலாளா் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்களைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் 14 முதல் 18 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.