குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை
சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் 4 அடி!
கோவை : கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவைக்கு அடுத்து வரும் மாதங்களுக்கான குடிநீர் ஆதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் நான்கு அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது.
நடப்பாண்டில் முதல் முறையாக இந்த அளவு நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுவாணி அடிவாரப் பகுதியில் 86 மி.மீ மழையும், அணைகட்டு பகுதியில் 107 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. நேற்று 26.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 30.24 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் 12 அடிக்கும் மேல் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. மே 23-ஆம் தேதி 17.91 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 30.24 அடியாக உயர்ந்து உள்ளது.
அணையின் முழுக் கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், மழை தொடர்ந்து பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுவாணி அணை நீர், கோவை மாநகராட்சியின் 22 வார்டுகள், கோவை மாவட்ட மேற்குப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினமும் 63.72 எம்.எல்.டி. நீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், கோவை மக்களின் குடிநீர் தேவைக்கு இனி வரும் நாள்களில் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.