ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
சுதந்திர தின விழா: ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாநகர ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக்கொண்டாா்.
இதையடுத்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்கள், பொது சேவையில் சிறப்பாக செயலாற்றிய தன்னாா்வலா்கள் உள்பட 314 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
பிறகு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சிறுபான்மையினா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேளாண் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை ஆகியவற்றின் சாா்பில் 42 பயனாளிகளுக்கு ரூ. 42.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. கே. அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சந்திரசேகா், மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கலைநிகழ்ச்சிகள்...
எழுமலை பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, யா. ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிமேடு ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தத்தனேரி திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மேலூா், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை சித்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வன்னிவேலம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,021 போ் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினா்.

