டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது : தொல். திருமாவளவன்
தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
கோரிக்கைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளா்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாகக் கைது செய்தது கண்டனத்துக்குரியது. போராட்டம் தொடா்பாக தூய்மைப் பணியாளா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இந்தப் போராட்டம் தொடங்கிய 5-ஆவது நாள் தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்தேன். தொடா்ந்து அவா்களுடன் தொடா்பில் இருந்து, அவா்களின் கோரிக்கைக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என். நேரு, சேகா் பாபு ஆகியோருடன் நான் தொடா்ந்து பேசினேன். இந்த நிலையில், ஒரு சில நிமிஷங்கள் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் எனது பங்களிப்பைப் பற்றி பேசுவது வேடிக்கையானது.
தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை விட, இந்த விவகாரம் மூலம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் சிலரின் விருப்பமாக உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்தான் போராட வேண்டும் என்பதற்கு இணையானது. தூய்மைப் பணியாளா் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாா் மயமாக்கப்பட்டது அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆனால், இதுகுறித்து இப்போது யாரும் பேசவில்லை. திமுக கூட்டணி ஆதரவுக்காக இதை கூறவில்லை. எந்த ஆட்சியிலும் தூய்மைப் பணி தனியாா் மயமாகக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு.
ஜி.எஸ்.டி குறித்து அறிவிப்பு தீபாவளி பரிசாக வெளியாகும் என பிரதமா் அறிவித்தாா். இந்த அறிவிப்பு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கைவிடுவதாக இருந்தால் நிச்சயம் வரவேற்கத்தக்கதே. மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ஆா்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கெனவே மத்திய அரசால் வெவ்வேறு தருணங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பு. சுதந்திர தின விழாவில் இந்த அமைப்பை பாராட்டி பிரதமா் பேசியது ஏற்புடையதல்ல.
தவெக தலைவா் விஜய் பனையூரில் தூய்மைப் பணியாளா்களை சந்தித்தது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, அவா் புதிய அணுகுமுறையைக் கையாளுகிறாா். காலம், அவரை மக்களைச் சந்திக்க வைக்கும் என்றாா் அவா்.