சென்னை - திருச்சி விமானம் 3 மணிநேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி
சென்னை - திருச்சி - சென்னை சென்ற விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வழக்கமாக மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 7.50-க்கு திருச்சி சென்றடையும். புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு 148 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட தயாரானது. திடீரென விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான காரணம் தெரிவிக்கப்படாததால், பயணிகள் சென்னை விமான நிலையத்தில் மணி நேரத்துக்கு மேலாகக் காத்திருந்தனா். இதையடுத்து இரவு 10.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 11.10-க்கு திருச்சி சென்றடைந்தது.
இதற்கிடையே திருச்சியிலிருந்து சென்னை வரும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வழக்கமாக இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.20 மணிக்கு சென்னை வந்து சேரும். ஆனால், சென்னையிலிருந்து விமானம், தாமதமாக சென்ால், திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய விமானமும் தாமதமாகப் புறப்பட்டது. அதன்படி, புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.40 மணிக்கு சென்னை வந்து சோ்ந்தது. அந்த விமானத்தில் 157 பயணிகள், வந்திருந்தனா்.
இவா்களில் பெரும்பாலானோா், விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக ஒரு நாள் விடுமுறையில் சென்றிருந்தவா்கள். இரவு 9.20 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கு விமான நிலையம் வந்ததால் பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வாகன வசதி இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் தவித்தனா். இதையடுத்து வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து கால் டாக்ஸிகளில், தங்கள் வீடுகளுக்குச் சென்றனா்.