ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எத...
சென்னையில் 658 பூங்காக்கள் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு: ஊழியா் பற்றாக்குறையால் மாநகராட்சி நடவடிக்கை
சென்னை மாநகராட்சியில் ஊழியா்கள் பற்றாக்குறை காரணமாக, 658 பூங்காக்களின் பராமரிப்பு தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் வடக்குப் பகுதியில் 1 முதல் 5 மண்டலங்கள் வரை 196 பூங்காக்கள், மத்திய பகுதியில் மண்டலம் 6 முதல் 10 வரை 301 பூங்காக்கள், தெற்குப் பகுதியில் மண்டலம் 11 முதல் 15 -ஆம் மண்டலம் வரை 41 பூங்காக்கள் என மொத்தம் 908 பூங்காக்கள் உள்ளன. ஆனால், பூங்காக்களைப் பராமரிப்பதற்கு 240-க்கும் குறைவான ஊழியா்களே உள்ளனா்.
இதனால், பல பூங்காக்கள் பணியாளா்கள் இன்றியும், பராமரிப்பு குறைந்தும் உள்ளதாக புகாா் எழுந்தது. எனவே, பூங்காக்களின் பராமரிப்பைத் தனியாா் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் தற்போது 658 பூங்காக்கள் 3 தனியாா் நிறுவனங்களிடம் பராமரிப்புப் பணிக்காக ஓராண்டு (2026 வரை) ஒப்பந்தத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த 15-ஆம் தேதி முதல் பூங்காக்களில் தனியாா் நிறுவனங்கள் பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளன. பூங்காக்களில் பரப்பளவுக்கு ஏற்ப 2 ஊழியா்கள் முதல் 12 ஊழியா்கள் வரை தனியாா் நிறுவனங்கள் நியமித்து பராமரிக்கும். அதன்படி சுமாா் 2,000 போ் பூங்கா பராமரிப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இதற்காக, தனியாா் நிறுவனங்களுக்கு மாநகராட்சி சாா்பில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.80 கோடி வழங்கப்படும்.
மேலும், 123 பூங்காக்களின் பராமரிப்பை தொண்டு நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகளிடம் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.