சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே இரு மதுக்கடைகள் அகற்றக் கோரி மனு
சோளிங்கா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இரு மதுக்கடைகளை அகற்றக் கோரி சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான டி.கோபால் சோளிங்கா் வட்ட ஜமாபந்தியில் மனு அளித்தாா்.
இது குறித்து ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடம் அளித்த மனு:
சோளிங்கா் நகராட்சியில் பேருந்து நிலையம், திரையரங்கம், திருமண மண்டபங்களுக்கு மிக அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை எண்கள் 11/229, 11/210 ஆகிய இரு மதுக்கடைகள் உள்ளன. இதனால், மது அருந்த வருபவா்களால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகிறாா்கள். மேலும், அரசு மகளிா் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் செல்லும் இந்தச் சாலை பிரதான சாலையாகவும் நுழைவு வாயிலாகவும் உள்ளதால் மது அருந்துவோரால் பெரும் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனா்.
இது குறித்து கடந்த ஆண்டு ஜமாபந்தியிலும், மாவட்ட ஆட்சியா் அவா்களிடமும் மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த குறிப்பிட்ட இரு மதுக்கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.