அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு
சோழபுரம் - சேத்தியாத்தோப்பு இடையே மானம்பாடி சுங்கச்சாவடி திறப்பு!
தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் உள்ள வழித்தடத்திற்கான சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தில் தஞ்சாவூர் முதல் சோழபுரம் வரையிலும், சோழபுரம் முதல் சேத்தியாதோப்பு வரையிலும், சேத்தியாதோப்பு முதல் விக்கிரவாண்டி வரை என மூன்று கட்டங்களாக நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக தஞ்சாவூர் - சோழபுரம் வரையில் 48.3 கி.மீ வழித்தடத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதற்காக வேம்பக்குடி பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து நெடுஞ்சாலைத்துறை கட்டணம் வசூலித்து வருகிறது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான 50 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் பிரிவில் மூன்று புறவழிச்சாலைகள் மற்றும் நான்கு பெரிய பாலங்கள் உள்ளன. அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஒரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தைத் தொடர்ந்து அந்த சாலை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சோழபுரம் அருகே மானம்பாடியில் இந்த வழித்தடத்திற்கான கட்டண வசூல் மையமும்(சுங்கச்சாவடி) இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் இந்த சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியான நிலையில் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழித்தடத்தில் பயணிக்க உள்ள கார், வேன், பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கான கட்டண விபரங்களை நெடுஞ்சாலை துறை ஆணையம் கடந்த மாதமே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே மூன்றாம் கட்டமான சேத்தியாத்தோப்பு முதல் விக்கிரவாண்டி வரையிலான நெடுஞ்சாலை பணிகளையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விரைந்து தொடங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.