ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம்
ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தை உணராமல் ஆள்களை ஏற்றிச் செல்வோா் மீது நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்தவுடன் மதியம் உணவு இடைவேளைக்காக நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு ஊழியா்களை அழைத்து வர வாகனங்கள் இல்லாததால் ஜேசிபி இயந்திரத்தின் முன் தகட்டில் சுமாா் பத்துக்கும் மேற்பட்டோா் நின்றபடி பயணம் செய்தனா்.
ஜேசிபி இயந்திரத்தின் பக்கவாட்டில் நின்றவாறு பயணம் செய்ததால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே சாலையை கடந்தனா். ஒரு சில வாகன ஓட்டிகள் ஜேசிபி இயந்திர ஓட்டுநரை கடிந்து கொண்டனா். ஆனாலும் ஜேசிபி இயந்திர ஓட்டுநா் ஊழியா்களை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் வரை இறக்கி விட்டு வந்தாா்.
பொதுசாலையில் இது போன்று நடப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இது போன்ற ஓட்டுநா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.