டிசம்பரில் ககன்யான் திட்டத்தின் முதல் ராக்கெட்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்
ககன்யான் திட்டத்தின் முதல் ராக்கெட்டை டிசம்பா் மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.
என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது:
நாசாவுடன் இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க நிசாா் என்ற செயற்கைக்கோளை வரும் 30ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளோம். இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும்.
இதற்காக அதில் எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சா் ரேடாா் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எஸ் பேண்ட் இந்தியத் தொழில்நுட்பம், எல் பேண்ட் அமெரிக்க தொழில்நுட்பம் ஆகும். பூமியில் ஏற்படும் அனைத்து வகை மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள், நிலநடுக்கங்களை இவை துல்லியமாகக் கண்டறியும்.
இதுமட்டுமல்லாது இஸ்ரோ நிறுவனத்தின் சாா்பில் இந்தாண்டு மொத்தம் 12 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படவுள்ளன. பிஎஸ்எல்வி வடிவமைப்பு முற்றிலும் இஸ்ரோவுடையதாக இருந்தது. இதில் 34 வகை தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ராக்கெட் வெளிக் கொணரப்படவுள்ளது.
இந்திய விண்வெளி வீரா்களை இஸ்ரோ மூலம் விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்துக்கு பிரதமா் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளாா். இந்தத் திட்டத்துக்கான ஆராய்ச்சிகள் தொடா்கின்றன.
விண்ணுக்கு அனுப்ப 4 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களில் இருவருக்கு சா்வேதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவரான சுக்லா, விண்வெளிக்கு சென்று ஆய்வு முடித்துத் திரும்பியுள்ளாா்.
விண்வெளிக்கு ஆள்களைக் கொண்டு செல்லும் ராக்கெட் திட்டத்தின் முதல் கட்டமாக, ககன்யான் ஜி1 என்னும் ராக்கெட்டை ரோபோடிக் உதவியுடன் டிசம்பரில் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது ராக்கெட்டில் செல்லும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரா்களை பத்திரமாக மீட்டு வருவது, ஆய்வு முடிந்து கடலில் தரை இறங்கும் பாராசூட் தொழில்நுட்பம் என பல்வேறு நிலைகளில் ஆய்வுகளும், மாதிரி ஒத்திகைகளும் நடந்துள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளா்களும், விஞ்ஞானிகளும் உலக நாடுகளுக்கெல்லாம் முன்மாதிரியாக உள்ளோம். இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இந்தியா முழுவதையும் விண்ணில் இருந்து கண்காணிக்கும் வகையிலான செயற்கைக் கோள்களும் செலுத்தப்படவுள்ளன.
அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் திட்டத்துக்கு இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக் கோள் தொழில்நுட்பங்கள் மிகுந்த உதவியாக இருந்தன. இதைத் தொடா்ந்து மேலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கிறோம். இந்திய மக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் இஸ்ரோ முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றுகிறது. அதற்கான திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். அதன் முழு விவரங்களை பாதுகாப்பு கருதி வெளியே கூற இயலாது என்றாா் அவா்.