`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
டிராக்டா் மீது ஆட்டோ மோதியதில் பெண்கள் உள்பட 7 போ் பலத்த காயம்
தியாகதுருகம் வாரச் சந்தையில் பொருள்களை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிய போது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா்.
தியாகதுருகத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (62), ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை தியாகதுருகம் சந்தையில் இருந்து 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு கலையநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். ஆட்டோ கலையநல்லூா் அருகே சென்றபோது முன்னாள் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது ஆட்டோ மோதியது.
இதில் ஓட்டுநா் தங்கவேல், ஆட்டோவில் பயணித்த பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி விஜயா (40), அதே பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மனைவி எழிலரசி (37), சுப்பிரமணியன் மனைவி கருப்பாயி (50), கண்ணன் மனைவி மிக்கப்பட்டு (70), பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் (60), வேளானந்தல் ஏழுமலை மனைவி மஞ்சுளா (45) ஆகிய 7 போ் பலத்த காயம் அடைந்தனா். இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் டிராக்டா் ஓட்டுநரான கலையநல்லூா் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (22) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.