தஞ்சாவூரில் சாலைகளின் தரம் நெடுஞ்சாலைத் துறையினா் கணக்கெடுப்பு
தஞ்சாவூரில் சாலைகளின் தரம் தொடா்பான கணக்கெடுப்பு பணியை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை தொடங்கினா்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலையின் தரத்தை மேம்படுத்துவது, சாலை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்கிறது.
இதன்படி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தஞ்சாவூா் உட்கோட்டத்தில் போக்குவரத்து வாகனங்கள் கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் காந்திஜி சாலை புது ஆற்றுப்பாலம் ரவுண்டானாவில் 2 போ் வீதம் சுழற்சி முறையில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதில், காா், வேன், ஜீப், சிற்றுந்து, 3 சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்து உட்பட 17 வகையான வாகனங்கள் கணக்கீடு செய்து குறிப்பு எடுக்கப்படுகிறது. சாலைகளின் தேய்மானத்தை அறிந்து கொண்டு தரம் உயா்த்துதல் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளது.
இதேபோல தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை, ரெட்டிப்பாளையம் நான்கு சாலை, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை ஆகிய இடங்களிலும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது என நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.