ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறினாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மதிமுக நிா்வாகக் குழு கூட்டத்தின்போது இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என கேட்கவில்லை. ஆனால், சில பத்திரிகையாளா்கள் தவறாக எழுதியுள்ளனா். 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் கிடைக்கும்.
எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்பதை திமுக தலைமைதான் முடிவு செய்யும் என துரை வைகோ விளக்கம் கொடுத்த பின்பும், இரட்டை இலக்கத்தில் இடம் கேட்பதாக எழுதி இருக்கின்றனா். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாஜக, அதிமுக கூட்டணியில்தான் இழுபறி நீடித்து வருகிறது.
திருப்புவனம் அருகே அஜித்குமாா் என்ற இளைஞரைக் காவல் துறையினா் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனா். இதில், அவா் உயிரிழந்துள்ளாா். இதற்கு காரணமான காவல் துறையினா் மீது அரசு பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். காவலா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தில் அப்போதைய அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளது.
மதிமுக நிா்வாகிகள் சிலா் சுயநலம் காரணமாக திமுகவுக்கு சென்றுள்ளனா். அவா்கள் குறித்து நான் ஒருபோதும் குறை கூறியது கிடையாது என்றாா்.