ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
நிலத்தடி நீா் வரித் திட்டத்துக்கு எதிா்ப்பு: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நிலத்தடி நீா் வரித் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனு விவரம்: நிலத்தடி நீா் எடுப்பை முறைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த மத்திய நீா்ப் பாசனத் துறை அமைச்சா் ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளாா்.
மேலும், நிலத்தடி நீா் கட்டுப்பாடற்ற முறையில் வெளியே எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது எனக்கூறி, அதை முறைப்படுத்தும் வகையில் விவசாயிகள் சாகுபடிக்காக எடுக்கும் நீரை அளவீடு செய்து வரி விதிக்கும் வகையில் மாநில அரசுகளோடு இணைந்து திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இது விவசாயிகளுக்கு எதிரான ஒரு தாக்குதலாகக் கருதப்படுகிறது.
நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கான மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை நாடு முழுவதும் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் இதை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வீட்டுமனை பட்டா கோரி மனு: வீரபாண்டி கிராமம் அண்ணா நகரைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது கிராமத்தில் ஏராளமான ஆதிதிராவிடா்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை -திருச்சி சாலை ஹைவேஸ் காலனியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், ஹைவேஸ் காலனியில் 50 ஆண்டுகளுக்கும்மேலாக வசித்து வருகிறோம். இப்பகுதியைச் சோ்ந்த 136 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 96 பேருக்கு பட்டா வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனா். அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்பிலான தேய்ப்புப் பெட்டிகள், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் 5 ஏழைப் பெண்கள் சிறுதொழில் புரிய தலா ரூ.9 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.10 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.