தனியாா் நிறுவன தொழிலாளா்கள் 8 ஆவது நாளாக போராட்டம்: எஸ்.ஐ. சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
சேலம் புதுரோடு பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் நிறுவனம் மூடப்பட்டதைக் கண்டித்து, 8 ஆவது நாளாக தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளரை தொழிலாளா்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் புதுரோடு அருகே இயங்கிவந்த தனியாா் மின்னணு நிறுவனத்தில் 450க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் நிறுவனத்தை திறக்க வலியுறுத்தியும் கடந்த 1 ஆம் தேதி முதல் தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், அங்கு வந்த உளவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளரை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்தனா்.
அப்போது, நீங்கள் அரசுக்கு சரியான அறிக்கை கொடுக்கவில்லை. இவ்வளவு நாள்கள் போராட்டம் நடைபெறுவதற்கு நீங்கள்தான் காரணம் எனக் கூறி முற்றுகையிட்டனா். இதனையறிந்த சூரமங்கலம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த உளவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகரன் விடுவிக்கப்பட்டாா்.
இதனிடையே, தனியாா் மின்னணு தொழிற்சாலைக்கு சென்றபோது, தன்னை சிலா் தாக்கி விட்டதாக புகாா் செய்து, சேலம் அரசு மருத்துவமனையில் காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகரன் சோ்ந்துள்ளாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.