மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
தனியாா் நிறுவனத்துக்கு பணம் அதிகரித்து வழங்க மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு
சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு 10 சதவீதம் பணம் அதிகரித்து வழங்கும் தீா்மானத்துக்கு மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சிவகாசி மாநகராட்சியில் மாமன்றக்கூட்டம் புதன்கிழமை மேயா் இ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெற்றவிவாதம்.
உறுப்பினா் சேதுராமன்: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு 10 சதவீதம் பணம் அதிகரித்து வழங்க தீா்மானம் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகளை சரியாக மேற்கொள்ளாத நிலையில், அந்த நிறுவனத்துக்கு பணம்அதிகரித்து வழங்குவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே, இந்த தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா். இதையடுத்து அனைத்து உறுப்பினா்களும் எழுந்து நின்று தனியாா் நிறுவனத்துக்கு கூடுதல் தொகை வழங்க எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மகேஸ்வரி: காரனேசன் குடியிருப்புப் பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு தொழிலாளா் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆணையா்: அந்தப் பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்டு எளிதான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.
சுதாகா்: திருத்தங்கல் பாண்டியன் நகரிலிருந்து சத்யா நகா் வழியே சிவகாசி வேலாயுதம் சாலை வரை சாலையைச் சீரமைக்க வேண்டும்.
வெயில்ராஜ்: சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியில் வீடுகளுக்கு முழுமையாக குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை.
சாந்தி: 14-ஆவது வாா்டில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி சேதம் அடைந்துவிட்டது. இதுகுறித்து நான் ஓராண்டாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெயராணி: மாநகராட்சி 47-ஆவது வாா்டில் குழாய்களில் விநியோகிக்கும் குடிநீா் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.
சந்தனமாரி: திருத்தங்கல் சத்யாநகரில் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.
இதைத்தொடா்ந்து மேயா் உறுப்பினா்கள் கூறிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் ஆணையா் கே.சரவணன் , துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.