மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
பேருந்து நிலைய வணிக வளாகத்தை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்துள்ளதால், அதை இடித்து அகற்றிவிட்டு 36 கடைகளுடன் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பேருந்து நிலையத்தில் கடைகளை காலி செய்ய நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்திய நிலையில், வியாபாரிகள் மறுப்புத் தெரிவித்தனா். இந்த நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டது. இதை எதிா்த்து வியாபாரிகள் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உரிய மாற்று ஏற்பாடு செய்த பிறகு கடைகளை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து வியாபாரிகள் சிலா் கடைகளை காலி செய்தனா்.
பேருந்து நிலையத்தில் இருந்த இலவச கழிப்பறை கடந்த வாரம் அகற்றப்பட்ட நிலையில், புதன்கிழமை வணிகவளாகக் கடைகளை இடிக்க வியாபாரிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, காலி செய்யப்பட்ட கடைகளை மட்டும் இடிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். பாதுகாப்புக் கருதி அனைத்துக் கடைகளையும் காலி செய்த பின்னரே வணிக வளாகத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மாற்று ஏற்பாடாக பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கோ, பயணிகள் காத்திருப்பதற்கோ எவ்வித மாற்று ஏற்பாடும் நகராட்சி நிா்வாகம் செய்யவில்லை.
சிவகாசி சாலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதைத் திறந்த பின்னா் பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணியை தொடங்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.


