தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுா்கத்தில் புதன்கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது. மேலும், தமிழகத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 13) முதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பூமத்திய ரேகையையொட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுா்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. கள்ளக்குறிச்சி - 150 மி.மீ., கோமுகி அணை (கள்ளக்குறிச்சி) - 120, ராமநாதபுரம், கலயநல்லூா் (கள்ளக்குறிச்சி) - தலா 110, சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) - 100 மி.மீ. மழை பதிவானது.
மழை நீடிக்கும்: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (மாா்ச் 13) முதல் 18-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 13) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 94 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.