தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கிளை சாா்பில் ஒலிமுகம்மது பேட்டை தவ்ஹீத் பள்ளிவாசல் வளாகத்தில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரத்ததான முகாம் தொடக்க விழாவுக்கு காஞ்சிபுரம் கிளையின் தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அன்சாரி, கிளை செயலாளா் யூசுப், துணைத் தலைவா் சாகுல், துணைச் செயலாளா் அப்துல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிளையின் மருத்துவ அணியின் செயலாளா் சா்புதீன் தனது வரவேற்புரையில் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும், ரத்ததான முகாம்களை அதிகமாக நடத்த உதவியாக நடமாடும் ரத்ததான வாகனம் தேவைப்படுவதாகவும் பேசினாா்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலா் கல்பனா ரத்ததானம் செய்த 152 பேருக்கு ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டதுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கினாா்.