தாய் கொலை: மகனுக்கு ஆயுள் சிறை
வந்தவாசி அருகே தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நாயக்கன்பாளையம் கிராமம், ரோட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சந்திரா (61). ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளரான இவா், கடந்த 3.8.2020 கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து, தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், மது அருந்துவதற்கு பணம் தராததால் சந்திராவின் மூத்த மகன் வெங்கடேசன் (42) அவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுஜாதா தீா்ப்பளித்தாா்.
மேலும், அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். இதையடுத்து, போலீஸாா் வெங்கடேசனை வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வீணாதேவி ஆஜாரானாா்.