திமுக பிரமுகா் உயிரிழப்பு: உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட திமுக பிரமுகா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி, அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் வட்டம், திருப்பாச்சாவடிமேடு பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன்(37). திமுக விழுப்புரம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகவும், ஊராட்சி துணைத் தலைவராகவும் இருந்து வந்தாா். சபரிநாதனுக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்து வந்ததாம்
இதனால் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தாா். இந்நிலையில் சபரிநாதனுக்கு திங்கள் கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
உறவினா்கள் போராட்டம்: இறப்பு குறித்து தகவலறிந்த சபரிநாதனின் உறவினா்கள் மருத்துவமனை முன் திரண்டு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது. மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா். பின்னா் இறந்தவா் தரப்பினரிடம் புகாரைப் பெற்று, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.