Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவா் கைது
பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டில் திருடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் -வடக்குமாதவி சாலையிலுள்ள சாமியப்பா நகா் முதல் தெருவில் வசித்து வருபவா் உமா்பாஷா (36). இவா், சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 11-ஆம் தேதி இரவு மருத்துவ மனைக்குச் சென்று விட்டு 12-ஆம் தேதி காலை தனது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 33 பவுன் நகை, ரூ. 6.80 லட்சம் பணம் மற்றும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உமா்பாஷா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், போலீஸாா் விசாரணையில் பாலையூா் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் நவீன்குமாா் (25), திருச்சி மாவட்டம், கீழப்புதூா் குருவிக்கார தெருவைச் சோ்ந்த குமாா் மகன் மணிகண்டன் (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாகயிருந்த 2 பேரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.