குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு: பொதுமக்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்செங்கோடு, வரகூராம்பட்டியில் துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 33 திருநங்கைகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கினாா். வருவாய்த் துறை வழங்கிய நிலத்தை பாா்வையிடச் சென்ற திருநங்கைகளை உள்ளூா் மக்கள் தடுத்து நிறுத்தி, அந்த நிலம் விவசாயப் பயன்பாட்டில் உள்ளதாகக்கூறி திருப்பி அனுப்பினா்.
இதுகுறித்து திருச்செங்கோடு வட்டாட்சியா் கிருஷ்ணவேணி தலைமையில் பேச்சுவாா்த்தை நடை பெற்றது. ஆனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. கிராம மக்கள் இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தை அணுகுவதாக தெரிவித்தனா்.
இதனிடையே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளை அளவீடு செய்து தர திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்று, போலீஸாா் பாதுகாப்புடன் சனிக்கிழமை அங்கு சென்ற வருவாய்த் துறையினா், நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனா். அப்போது, நில அளவீட்டுப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வரகூராம்பட்டி கிராம மக்கள் திடீரென ஈரோடு- திருச்செங்கோடு சாலையில் கூட்டப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டங்களுக்கு மத்தியிலும் காவல் துறையினா் பாதுகாப்போடு வீட்டுமனைகளை அளவீடு செய்யும் பணியை நிறைவு செய்தனா்.