குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
ரூ.1.33 கோடியில் நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் புனரமைப்பு
நாமக்கல் குளக்கரை கல்மண்டபம் ரூ. 1.33 கோடியில் புனரமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ள நிலையில், அவருடைய வடிவிலான விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயில் நாமக்கல் கமலாலயக் குளக்கரை அருகே உள்ள பழைமையான கல் மண்டபத்தில் அமைந்திருந்தது. பங்குனி தோ்த்திருவிழாவின்போது இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மா் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும்.
இந்த கல் மண்டபம் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணிற்குள் புதையத் தொடங்கியதால் அங்கு விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த மண்டபத்தை அறநிலையத் துறை மற்றும் சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினா் நேரில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பதற்கான அனுமதியை வழங்கினா்.
அதன்பிறகு, இந்துசமய அறநிலையத் துறை திருப்பணிகள் கமிட்டி ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது. கடந்த 2022 செப்.4-இல் விஸ்வரூப ஆஞ்சனேயா் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி அருள்பாலித்த கல் மண்டபம் சீரமைப்பு பணியானது சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவில், நரசிம்மா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா.நல்லுசாமி, உறுப்பினா்கள் செள.செல்வசீராளன், இராம.ஸ்ரீனிவாசன், மல்லிகாகுழந்தைவேல், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, மாமன்ற உறுப்பினா் டிடி.சரவணன் மற்றும் அலுவலா்கள், கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இப்பணிகளை ஓராண்டுக்குள் முடித்து விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்த கோயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.